உலக ஓற்றுமை – கவிதை

மத நல்லிணக்கம் - உலக ஒற்றுமை

நாம் யார்?

 

ஆப்பிரிக்கக் காடுகளில்

ஒரினமாய் வாழ்ந்து,

பூமியை நிரப்ப பிரிந்துபோய்

பல்வண்ணம் பெற்று,

பன்மொழிக் கூட்டமாய்ப் பிரிந்து,

ஒரிறைவனுக்கு பல்பெயர் சூட்டி,

பலவேடம் கற்பித்து,

பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு

இந்த மண்ணில் ஒன்று சேர்ந்து இருக்கிறோம்!

 

நவீனத் தொழில்நுட்பமும்

நவீனத் திறன்பேசியும்

உலகை ஒரு குடும்பமாக

உருமாற்றம் செய்திருக்கிறது!

 

இது சேரும் நேரம்,

பிரியும் நேரமன்று!

இது சமாதானத்தின் தருணம்,

சண்டையிடும் தருணமன்று!

 

நம் சண்டைகளை 

எப்போது நிறுத்துவோமென

கடவுளின் ராஜ்யம் காத்திருக்கிறது!

 

ஆத்திகம் பேசும் அடியவர்களுக்கு

அவனே அன்பு!

நாத்திகம் பேசும் நல்லவர்களுக்கு

அன்பென்னும் குணமாக அவன்

அவதாரம் எடுக்கிறான்!

முன்பு பாடலில் சொன்னதைக்

கவிதையில் வழிமொழிகிறேன்…

 

ஒன்றாய் இருக்கும் தன்மையினால்தான்

மனிதன் மற்ற உயிர்களைவிட உயர்ந்து நிற்கிறான்.

பரிணாமத்தின் கடைசிப்படி உலக ஒற்றுமை.

 

பழமையைப் பிடித்து

எத்தனை காலம் நாம்

தொங்கிக் கொண்டிருப்பது?

மூடத்தனத்தில் எத்தனை காலம்

மதிமயங்கி இருப்பது?

 

‘கையளவு மனது’ என்றத்

தொலைக்காட்சித் தொடரை,

நம் பழைய இல்லங்களில்,

தொன்னூறுகளில்,

கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்

பார்த்திருப்போம்…

 

வறுமையில் வாடும் இளம்விதவை

தன் குழந்தைகளை

வெவ்வேறு பெண்களுக்குத்

தத்துக் கொடுத்து விடுகிறாள்…

அக்குழந்தைகள் பலவிதமாய் வளர்ந்து

பெரியவர்களாகி,

ஒருவரை ஒருவர் அறிந்து ஒன்றாய்ச் சேர்ந்து,

தங்களது அன்னையைத் தேடும்

உணர்ச்சிக் காவியம் அது!

 

அந்தக் கதையில் வருவது போல,

நாமெல்லோரும் இந்த பூமித்தாயின் குழந்தைகள்!

வெவ்வேறு இடங்களில் குடிபெயர்ந்து வளர்ந்த

இறைவனின் குழந்தைகள் நாம்!

 

இப்போது ஒன்றாய்ச் சேர்ந்திருக்கும் நாம்

அன்பில் தேடுவோம் அவனை!

நமக்குள் தேடுவோம் அவனை!

 

அல்லாவும், கர்த்தரும், அரியும் சிவனும்

ஓர்பொருள் குறித்த பல பெயர்கள்…

இதைத்தான் ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னார்;

விவேகானந்தர் சொன்னார்;

ரமண மகரிஷி சொன்னார்;

குரு நானக் சொன்னார்;

பாடல்களில் பாரதியும் புகன்றார்;

காந்தியும் கலாமும் அதை ஏற்று நடந்ததால்தான்

வரலாறு அவர்களை உயர்த்திக் காட்டுகிறது.

 

இன்னும் எத்தனைபேர் வந்து இதையே சொல்ல வேண்டும்?

யார் வந்து சொன்னால் நமக்கெல்லாம் புரியும்?

 

பூமி ஒரு குடும்பம் என்கிறது மகா உபநிடதம்;

ஒவ்வொரு ஊரும் நம் ஊர், ஒவ்வொருவனும் நம் உறவினன் என்று பாடுகிறது புறநானூறு;

உண்மை ஒன்றே, 

அதை ஞானிகள்

 பலபெயர்களால் அழைப்பார்கள் என்று

உரக்கச் சொல்கிறது ரிக்வேதம்!

 

உற்று நோக்கினால் தெரியும்,

இஸ்லாமும் கிருத்தவமும் இதையே

வழிமொழிகின்றன என்று!

 

ஆக, இம்மண்ணின் தர்மம் சொல்வது ஒன்று;

அதன் பெயரால் நாம் செய்வது வேறொன்று!

உங்கள் இறைவன் சொல்வது ஒன்று;

அவன் பெயரால் நீங்கள் செய்வது வேறொன்று!

 

போதும்!

வேறுபாடுகள் தரும் போதையில்  காட்டிய

வெறித்தனங்கள் போதும்!

எனது மதம், எனது சாதி, 

எனது மொழி, எனது நாடு என்று

சுயவிளம்பரம் செய்து,

தற்பெருமை பேசி

ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு

காலம் கழித்தது போதும்!

 

நாய் சிறுநீர் கழித்துத் தன்

எல்லையைக் , குறித்துக் கொள்கிறது;

மனிதன் வேறுபாடுகள் கற்பித்துத் தன்

எல்லைகளைக் குறித்துக் கொள்கிறான்;

இரண்டுக்கும் என்ன பெரிய  வேறுபாடு?

 

வாழ்க்கை என்பது குதிரைப் பந்தயம் அன்று;

மதங்களையும் இனங்களையும் 

குதிரைகளாய் ஓடவிட்டு,

எது ஜெயிக்கும் என்று வேடிக்கைப் பார்க்க

இங்கு நாம் வரவில்லை!

 

இந்த பூமியும் ஒரு நாள் அழியும்;

அதன் ஆயுளை நீட்டிப்போம்!

இருக்கும் வரை நன்றாய், ஒன்றாய், அன்பாய்

வாழ்வோம்!

– பி. சண்முகம்

ஆசிரியர்: Shanmugam P

I am a blogger and a self-published author. My book "The Truth About Spiritual Enlightenment: Bridging Science, Buddhism and Advaita Vedanta" is a guide to the ultimate freedom, bliss and oneness. The book is based on my own experience. My book "Discovering God: Bridging Christianity, Hinduism and Islam" shows how all three major religions of the world lead to the same truth. I am a past student of Sri Jayendra Saraswathi Swamigal Golden Jubilee Matriculation Higher Secondary School, Sankarnagar, Tirunelveli District.

பின்னூட்டமொன்றை இடுக