
வாங்குகின்ற மூச்செல்லாம் இசையாக்கிக் கூவுகிற
வரம்பெற்ற அழகான கோகிலமே!
வனத்தினிலே திரிகின்ற வண்ணத்துப் பூச்சிகளை
வசப்படுத்தும் சங்கீத சாகரமே!
தூங்காத விழியிணையின் துயரத்தைப் போக்கியெனைத்
தாலாட்ட வந்த இளம் காரிகையே!
தெய்வீக ராகத்தைத் தேடுகின்ற வண்டுக்குத்
தேனாகப் பிறப்பெடுத்தத் தாரகையே!
நீலமலை மாஞ்சோலைக் கிளைதங்கிக் கூவுகிற
நந்தவனச் கொடியமர்ந்த கோரகையே!
நீணடகடற் கரையினிலே தென்னைமரத் தோட்டத்தில்
நிலவொளியில் கவிபாடும் பேரழகே!
ஆலமரக் கிளைமேலே அமுதமொழிக் கவிபாடி
அனைவரையும் ஈர்த்திட்ட களத்தொனியே!
ஆகாயச் சூரியனை சங்கீத மழைபெய்து
குளிர்வித்த இசையருவிப் பொக்கிஷமே!
பாரதியின் குயில்பாட்டுக் கரும்பேடைக் குயிலாகப்
பாமாலை சூட்டுகின்ற அற்புதமே!
பாட்டுக்குப் பெருமைதரும் நோக்கத்தில் பிறப்பெடுத்த
புதியதொரு மதுகண்டப் புல்லினமே!
சாரதியாய் வந்தவனும் வனவாசம் சென்றவனும்
பிறப்பெடுத்த புண்ணியநம் பூமியிலே
சங்கீதம் தழைத்தோங்க மெல்லிசைக்கு முடிசூட்ட
சுயம்புவென உருவான கலைமகளே!
இசைத்தமிழை பெண்குயிலாம் இவள் ஆண்டாள் எனும்பேரை
வாங்கிவிடத் தவமிருக்கும் மலைக்குயிலே!
இனியிந்த பூமியிலே எல்லோரும் இன்புறவே
இசையாலே பூஜிக்கும் சுடர்கொடியே!
திசையெங்கும் விடிந்துவிட்ட செய்தியினை அறிவிக்கும்
தீம்பாடல் பாடுகின்ற திரவியமே!
தெய்வத்தின் குரலாகத் தென்னகத்தில் பிறப்பெடுத்து
தேவாரம் இசைக்கின்ற கோகிலமே!
- பி. சண்முகம்